மரபு நோய்கள்
நீரிழிவு நோயின் கூடாரமாகி வருகிறது நம் நாடு. 40, 50 வயதுகளில் தலைகாட்டத் தொடங்கிய டைப் -2 வகை நீரிழிவு நோய் இப்போது குழந்தைகளையும்கூடத் தாக்கத் தொடங்கியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சி. குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருப்பது சாதாரணமாகி வருகிறது. இது மரபியல்ரீதியாக அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவம் மட்டுமே ஒரே தீர்வு என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன, புதிதாக வந்துகொண்டிருக்கின்றன.
காரணங்கள்
நீரிழிவு நோய்க்கு மதுமேகம், சர்க்கரை வியாதி, டயாபடிஸ் எனப் பல வழக்குப் பெயர்கள் உண்டு. உடல்பருமன், போதிய உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், மரபியல் எனப் பல காரணங்கள் இதற்கு முன்னிறுத்தப்பட்டாலும், முறையற்ற உணவு முறைதான் முதன்மைக் காரணம். மதுமேக நோய் உண்டாவதற்கு வேகாத உணவு, செரிக்காத உணவு, அதிக இனிப்பு சேர்ந்த உணவு, அதிக அளவு உணவு, கெட்டுப்போன இறைச்சி, மதுபானம் எனப் பல காரணங்களைப் பட்டியலிடுகிறது சித்த மருத்துவம். இந்தப் பட்டியலில் உள்ள அனைத்தும் துரித உணவின் மூலம் ஒரே நேரத்தில் நமக்குக் கிடைத்து, நீரிழிவு நோய் உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு இந்திய மருத்துவ முறையிலேயே பல்வேறு சிகிச்சைகள், மாத்திரைகள் உள்ளன.
‘BGR 34’ மாத்திரை
அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக்கான கவுன்சிலை (C.S.I.R.) சார்ந்த தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (N.B.R.I.) மற்றும் மத்திய மூலிகைச் செடிகள் ஆராய்ச்சி நிறுவனம் (C.I.M.A.P.) இணைந்து `BGR 34’ என்ற நீரிழிவு நோய்க்கான மாத்திரையைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளன. BGR என்பது Blood Glucose Regulator என்பதையும், 34 என்பது மாத்திரையில் உள்ள 34 வகையான முக்கிய வேதிப்பொருட்களையும் குறிக்கின்றன.
Berberine, Xanthopurin, Scopoletin, Pterostillbene, Palmatine, Isoquinoline போன்று இதில் உள்ள 34 வேதிப்பொருட்களும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மரமஞ்சள், வேங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தில், மஞ்சிட்டி, வெந்தயம் ஆகிய ஆறு மூலிகைகளின் சூரணம் மற்றும் சத்துகள் `BGR 34’ மாத்திரையில் கலந்துள்ளன. இந்த மாத்திரை ஆயுர்வேத மருந்தாக, மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.
No comments:
Post a Comment