Tuesday, 26 December 2017

கல்வி உரிமைச் சட்டம்

                               கல்வி உரிமைச் சட்டம்
கல்வி உரிமைச் சட்டம்:  என்ன செய்யப் போகிறது
நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் – 2009’( Right of Children to Free and Compulsory Education – Act – 2009) இவ்வாண்டு ஏப்ரல் 01, 2010 அமலுக்கு வந்திருக்கிறது.  இச்சட்டத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு நம் நாட்டின் கல்வி நிலையை கொஞ்சம் தொகுத்துக் கொள்வோம். இந்து மதம் பிராமணர் தவிர பிறர் கல்வி கற்பதை வேதங்கள் உள்ளிட்ட பிராமண சட்ட முறைகளைக் கொண்டு அறவே தடை செய்தது.  பவுத்த, சமண மதங்களின் எழுச்சி இந்திய வருணாஸ்ரம வரலாற்றில் முதல் புரட்சியாக அமைந்து பிறருக்கும் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தது.  வட இந்தியாவில் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற ஒரு சில அரசர்களின் ஆதரவில் பவுத்தமும் சமணமும் செழித்தது கொஞ்சகாலந்தான்.  பின்னர் குப்தர்களின் ‘இருண்டகாலத்தில்’ மீண்டும் இந்து மதம் ‘புத்துயிர்ப்பு’ பெற்றது.
தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பவுத்த – சமண சமயங்கள் செல்வாக்கு பெற்றிருந்தது.  ‘பள்ளி’ என்ற சொல் கூட சமணத்தின் கொடைதான்.  தமிழர்கள் இன்றும் பெருமை பேசும் ராஜராஜன் போன்றோர் முன்னெடுத்தது வேதக்கல்வி தானே தவிர வேறில்லை.
காலனியாதிக்க காலத்தில் செயல்பட்ட கிருத்தவ சமயப் பரப்பூழியர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் சில சுதேசி தனியார் நிறுவனங்கள் கல்விக் கூடங்களை நடத்தி வந்தன.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் அறியாமையைப் போக்கி பண்பாட்டை உயர்த்தவும், கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து 1813 ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் மூலம் கல்விக்கு மானியமாக 10,000 பவுண்டுகளை வழங்கினர்.  இந்த மானியத்தைக் கொண்டு வைதீக பார்ப்பனர்கள் சமஸ்கிருத சாஸ்திரங்களை சொல்லிக் கொடுக்க முயன்றபோது ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்கள் அனைவரும் கல்வியில் வடிகட்டும் கொள்கையை(Filtration Theory) ஆதரித்தனர் என்பதும் உண்மை.

No comments:

Post a Comment